பர்கூர் மலைப்பகுதியில் 70 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவி; சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்
பர்கூர் மலைப்பகுதியில் 70 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக மாலை நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே திடீர் அருவி ஏற்பட்டு அதில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இந்த நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் ஈரெட்டி என்ற இடத்தில் அருவி உள்ளது. இந்த அருவியில் மழைக்காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். தற்போது பர்கூர் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் ஈரெட்டி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 70 அடி உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகை அந்த பகுதி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். பலர் அந்த அருவியை தங்களுடைய செல்போனில் படம் மற்றும் வீடிேயா எடுத்து மகிழ்ந்தனர்.
வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் ஈரெட்டி அருவி உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் மட்டுமே மதிய நேரங்களில் குளிக்கின்றனர்.