வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.51 ஆயிரம் பறிமுதல்
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.51 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 4 மணி அளவில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஹேமச்சித்திரா, இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா ஆகியோர் தலைமையில் 9 பேர் அடங்கிய குழுவினர் 2 வாகனங்களில் வந்து, அந்த அலுவலகத்திற்குள் சென்றனர். மேலும் கதவுகளை மூடிவிட்டு, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை ஒரு அறையில் அமர வைத்தனர். பின்னர் அவர்களிடம் தனித்தனியாக கையிருப்பு தொகையை எழுதி வாங்கிக்கொண்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு அறையாக பணம் ஏதும் உள்ளதா? என்று சோதனை நடத்தினார்கள். அப்போது பொறியாளர் பிரிவு மற்றும் இதர பிரிவுகளில் கணக்கில் வராத ரூ.51 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இரவு 9 மணி அளவில் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களை சோதனை முடித்து வெளியே அனுப்பினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டவர்களின் அறைகளில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. ஒன்றிய பொறியாளர் அறை, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் அறை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை மற்றும் ஊழியர்கள் அறைகளில் தீவிரமாக சோதனை நடத்தினார்கள். வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.