நெல்லையில் தொடர் மழை; வீதிகளில் தேங்கிய வெள்ளம்

நெல்லையில் தொடர் மழை பெய்தது. இதனால் வீதிகளில் மழை வெள்ளம் தேங்கியது.

Update: 2021-10-29 20:36 GMT
நெல்லை:
நெல்லையில் தொடர் மழை பெய்து வருவதால், வீதிகளில் வெள்ளம் தேங்கியது.
 
தொடர் மழை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. சில இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை கொட்டியது.
அம்பை, மூலைக்கரைப்பட்டி, சேரன்மாதேவி, பாபநாசம், மணிமுத்தாறு, களக்காடு, நாங்குநேரி, ராதாபுரம், செங்கோட்டை, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்தது. நெல்லை மாநகர பகுதியில் மழை தூறிக் கொண்டே இருந்தது. 

வாகன ஓட்டிகள் அவதி

இதனால் நகர மற்றும் கிராமப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. நெல்லை டவுன், தெற்கு பாலபாக்யா நகர், பேட்டை, சந்திப்பு பகுதிகளில் பல இடங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். 
மேலும், மழை காரணமாக பாளையங்கோட்டை மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டன.

நீர்வரத்து அதிகரிப்பு

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பிரதான அணையான பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,045 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1,415 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 134.90 அடியாக உள்ளது. 
சேர்வலாறு அணை நீர்மட்டம் 135.83 அடியாகவும், மணிமுத்தாறு அணை 79.60 அடியாகவும், கொடுமுடியாறு 50.50 அடியாகவும், வடக்கு பச்சையாறு 16.65 அடியாகவும், நம்பியாறு 10.25 அடியாகவும் உள்ளது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: ராதாபுரம்-41, அம்பை-22, மூலைக்கரைப்பட்டி-30, சேரன்மாதேவி-30, சேர்வலாறு-24, பாபநாசம்-22, மணிமுத்தாறு 21, பாளையங்கோட்டை-20, கொடுமுடியாறு-20, நெல்லை-13, களக்காடு-12,  நம்பியாறு பகுதி-10, நாங்குநேரி-9.

மேலும் செய்திகள்