நீட் தேர்வு தோல்வி பயம் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

நீட் தேர்வு தோல்வி பயம் மாணவர் விஷம் குடித்து தற்கொலை

Update: 2021-10-29 17:59 GMT
கிணத்துக்கடவு

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நீட் தேர்வு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்தூர் குப்பையன் கோவில் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 54), விவசாயி. இவருடைய மனைவி வளர்மதி (44) இவர்களுக்கு கீர்த்திவாசன் (21), தினேஷ் (17) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.

இதில் கீர்த்திவாசன் பிளஸ்-2 படிப்பை முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த 3 முறை நீட் தேர்வை எழுதி இருந்தார். ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை. 

இந்த நிலை யில் 4-வதாக கடந்த முறை நீட் தேர்வை எழுதி உள்ளார். அந்த தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் அதில் தேர்ச்சி பெறுவோமா, மாட்டோமா என்ற அச்சம் கீர்த்தி வாசனுக்கு ஏற்பட்டது. 

விஷம் குடித்தார்

மேலும் அவர் ஏற்கனவே 3 தேர்வில் தனது விடைத்தாள் மாறிவிட்டதால்தான் தோல்வியடைந்துவிட்டேன். தற்போதும் தோல்வியடைந்து விடுவேனோ என்ற பயம் இருப்பதாக நண்பர்கள், உறவினர்களிடம் கூறி உள்ளார். 

இந்த நிலையில்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் திடீரென்று விஷம் குடித்தார். பின்னர் வெளியே சென்று இருந்த தனது தாயின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்துவிட்டதாக கூறினார். இதனால் அவர் பதறியடித்து வீட்டிற்கு வந்தார்.

பரிதாப சாவு 

அப்போது அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்த கீர்த்திவாசனை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். 

இந்த சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்