390 விவசாயிகளுக்கு இலவச மின்இணைப்பு ஆணை. அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
ராணிப்பேட்டையில் 390 பேருக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் 390 பேருக்கு இலவச விவசாய மின் இணைப்பு ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
இலவச மின் இணைப்பு
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தில் முதல்கட்டமாக 390 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பயனாளிகளுக்கு மின் இணைப்பு ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
390 விவசாயிகளுக்கு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,606 பயனாளிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, முதல்கட்டமாக 390 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளுக்கு இலவச மின் திட்டத்தை செயல் படுத்தி உள்ளார். இதற்கு கூடுதலாக தேவைப்படும் மின்சாரத்தை தடையின்றி கிடைக்க நடவடிக்கையையும் வருகின்றார்கள்.
மீதமுள்ள மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்றார்.
பணிநியமன ஆணை
மேலும் மின்சார வாரியத்தில் பணியின்போது இறந்த 4 பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் காந்தி வழங்கினார். நீரில் மூழ்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் விபத்து நிவாரண நிதி உதவித்தொகை தலா ரூ.3 லட்சம் வழங்கினார். தீபாவளி பண்டிகையையொட்டி விலையில்லா புடவைகளை வழங்கும் இத்திட்டத்தையும் தொடங்கி வைத்தார். முன்னதாக வாலாஜா ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டிரான்ஸ்பார்மரை அமைச்சர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நிகழ்ச்சியில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மேற்பார்வை பொறியாளர் ராஜன் ராஜ், செயற் பொறியாளர்கள் குமரேசன், விஜயகுமார் மற்றும் கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், துணைத் தலைவர் ராதா கிருஷ்ணன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.