பள்ளி மாணவ மாணவிகளின் பாரம்பரிய கலைப்போட்டிகள்
உடுமலையில், உடுமலை கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.
உடுமலை
உடுமலையில், உடுமலை கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாரம்பரிய கலைப்போட்டிகள் நடத்தப்பட்டன.
பாரம்பரிய கலை போட்டிகள்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக அனைத்து வகை பள்ளிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும், நமது பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும், வாய்ப்பாட்டிசை, கருவியிசை, நடனம் மற்றும் காண்கலை என்னும் 4தலைப்புகளில் ‘கலாஉத்சவ்' போட்டிகள் கடந்த 2015-2016-ம் கல்வியாண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் இந்த கல்வியாண்டில் பள்ளி, கல்வி மாவட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான ‘கலாஉத்சவ்' போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக பள்ளி அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படுகிறது.
உடுமலை கல்வி மாவட்டம்
இதில் உடுமலை கல்வி மாவட்ட அளவிலான போட்டிகள் உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2நாட்கள் நடந்தது. இதில் உடுமலை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகள் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டிகளை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ப.விஜயா தொடங்கி வைத்தார்.
இதில் நடனம் (செவ்வியல்), நடனம் (பாரம்பரிய நாட்டுப்புற வகை), காண்கலை (இருபரிமாணம்), காண்கலை (முப்பரிமாணம்), உள்ளூர் தொன்மை பொம்மைகள் விளையாட்டுகள், வாய்ப்பாட்டிசை (செவ்வியல்), வாய்ப்பாட்டிசை (பாரம்பரிய நாட்டுப்புற வகை), கருவி இசை (செவ்வியல்), கருவி இசை (பாரம்பரிய நாட்டுப்புற வகை) ஆகிய 9 வகை போட்டிகள் நடந்தன.போட்டிகளை தலைமையாசிரியை ப.விஜயா, உதவி தலைமையாசிரியர் டி.சிவக்குமார், தமிழாசிரியர்கள் வே.தைலியண்ணன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந்த 9 போட்டிகளில் இருந்து ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் (மாணவர்களில் ஒருவர், மாணவிகளில் ஒருவர்) மொத்தம் 18 பேர், திருப்பூர்மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதிஅங்கேரிபாளையத்தில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.