பர்கூர், அக்.30-
பர்கூர் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் தொழில் அதிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
தொழில் அதிபர்
சென்னை மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 27). ரப்பர் விற்பனை செய்யும் தொழிலதிபர். இவர் வியாபார வேலையாக நேற்று முன்தினம் ஓசூருக்கு காரில் வந்தார். பணியை முடித்து கொண்டு அவர் மீண்டும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
கார், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் பைபாஸ் சாலையில் சென்ற போது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் சசிகுமார் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விபத்தில் சிக்கிய லாரி, கேரளாவில் இருந்து சென்னைக்கு மிளகு பாரம் ஏற்றிச்சென்றது தெரிய வந்தது.
கூலி தொழிலாளி
பர்கூரை அடுத்த பாலேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 55). கூலி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி - பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் சுண்டம்பட்டி என்ற இடத்தில் சாலையை கடக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.