ஒரே படகில் அதிக தொழிலாளர்களை ஏற்றி செல்வது தடுக்கப்படுமா?
பாம்பன் கடலில் ஒரே படகில் அதிகமான தொழிலாளர்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படும்முன் தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ராமேசுவரம்,
பாம்பன் கடலில் ஒரே படகில் அதிகமான தொழிலா ளர்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்லப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படும்முன் தடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ரெயில் பாலம்
பாம்பனில் தற்போதுள்ள ரெயில் பாலத்தின் அருகில் ரூ.400 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இதுவரையிலும் பாம்பன் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலும் புதிய ரெயில் பாலத்திற்கான புதிய தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன.
2-வது கட்டமாக மண்டபம் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலும் மீதம் உள்ள புதிய தூண்கள் அமைக்கும் பணிகள் இரவு-பகலாக நடைபெற்று வருகின்றன. அதுபோல் இந்த புதிய ரெயில் பாலத்திற்கான பணிகளில் பீகார், ஒரிசா, குஜராத், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த 200-க்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆபத்து
இந்தநிலையில் பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்களை ஆபத்தான முறையில் ஒரே படகில் 30-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து பணிக்கு சென்று வரும் நிலை தொடர்கிறது.
அதிலும் குறிப்பாக கடலுக்குள் சிறிய படகில் அதிகமான பேர் அமர்ந்து பயணம் செய்வதோடு மட்டுமல்லாமல் ஒருவர்கூட பாதுகாப்பு கவசம் அணியாமல் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பாம்பன் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
கோரிக்கை
இதுபோன்று அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் படகு காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தால் கடலில் மூழ்கி உயிர்ப்பலி ஏற்படும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது. எனவே தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.