எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

எஸ்.வாழவந்தி அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2021-10-29 16:47 GMT
பரமத்திவேலூர்:
எஸ்.வாழவந்தியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரசு உயர்நிலைப்பள்ளி
மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எஸ்.வாழவந்தி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 170- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நடுநிலைப்பள்ளியாக‌ செயல்பட்டு வந்த பள்ளி கடந்த 2018-ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. எனினும் இந்த பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்படாமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. 
தற்போது பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தும் போதிய வகுப்பறைகள் இல்லாததால் கலையரங்கம் பகுதியில் உள்ள மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டித்தரக்கோரியும், பள்ளிக்கு அருகே உள்ள ஊராட்சி மன்றத்துக்கு சொந்தமான இடத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. 
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டக்கோரியும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கேரியும் நேற்று பொதுமக்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூக நலஆர்வலர்கள் பள்ளியின் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாலப்பட்டியில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மோகனூர் தாசில்தார் தங்கராஜ், பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகாசலம், மாவட்ட கல்வி அதிகாரி ராமன் ஆகியோர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மதுரைவீரன், தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஈஸ்வரன் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவர்கள், பெற்றோர்களின் திடீர் மறியல் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்