பட்டப்பகலில் மணல் கடத்திய லாரி சிக்கியது
தேவகோட்டையில் பட்டப்பகலில் மணல் கடத்திய லாரி சிக்கியது.
தேவகோட்டை,
-
தேவகோட்டை ஆற்றில் இருந்து பட்டப்பகலில் லாரியில் மணல் கடத்துவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் திருச்சி-ராமேசுவரம் சாலையில் முள்ளிக்குண்டு அருகே மறைந்து இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்தனர். லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.இதற்கிடையே போலீசார், வருவாய்த்துறையினர் யாராவது வருகிறார்களா? என டிப்பர் லாரி முன்பு கார் ஒன்று கண்காணித்து சென்றது. டிப்பர் லாரியை போலீசார் மடக்கி பிடித்ததும் காரில் சென்றவர்கள் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓட்டினார்கள். அதில் ஒருவரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் மணப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் (வயது29) என தெரியவந்தது. அதே கிராமத்தைச் சேர்ந்த பழனி (28) இலுப்பக்குடியை சேர்ந்த ரஞ்சித் (30) ஆகிய இருவரும் தப்பிவிட்டனர்.இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் பொன்செல்வி ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து தேவகோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தலைமறைவான பழனி மற்றும் ரஞ்சித் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.மணல் கடத்தி வந்த டிப்பர் லாரி மற்றும் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.