வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
சிவகங்கை மாவட்டத்தில் வாகன திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையில் ஏட்டுகள் சரவணன், முத்துப்பாண்டி, காளீஸ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் ஏற்கனவே வாகன திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 11 மோட்டார்சைக்கிளை கைப்பற்றினார்கள். இந்த தனிப்படையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த சிவகங்கை அடுத்த பில்லூர் அலுபிள்ளைதாங்கி பகுதியைச் சேர்ந்த அசோக் என்ற முத்துப்பாண்டி (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3 ேமாட்டார் சைக்கிள்கள், 2 வாள், மற்றும் 1½ கிலோ கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன.