தீபாவளி பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

Update: 2021-10-29 15:01 GMT
வேப்பூர், 

வாரச்சந்தை

வேப்பூர் கூட்டுரோட்டில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இங்கு, ஆத்தூர், தலைவாசல், மடப்பட்டு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகள், தானியங்கள், பழ வகைகளையும், ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, திருக்கோவிலூர் பகுதிகளை சேர்ந்த  விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளையும் விற்பனைக்காக கொண்டு வருவார்கள். இதை வியாபாரிகள் வாங்கி சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

ரூ.3 கோடிக்கு விற்பனை

அந்த வகையில் வெள்ளிக்கிழமையான நேற்று வாரச்சந்தை நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி இருப்பதால், வியாபாரிகள் போட்டிபோட்டு, ஆடுகளை வாங்கி சென்றனர். ஆடு ஒன்று அதிகபட்சமாக 16 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.  நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானது. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், வழக்கத்தை விட வியாபாரம் சற்று குறைந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்