முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் கொந்தளிப்பு

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். 5 மாவட்ட விவசாயிகளுக்கு இது கருப்பு நாள் என அவர்கள் கொந்தளித்தனர்.

Update: 2021-10-29 14:14 GMT
தேனி:
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். 5 மாவட்ட விவசாயிகளுக்கு இது கருப்பு நாள் என அவர்கள் கொந்தளித்தனர்.
முல்லைப்பெரியாறு பிரச்சினை
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படாமல் இருந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஓராண்டு இடைவெளிக்கு பிறகு நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும், முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை குறித்து விவசாயிகள் கருத்துகளை தெரிவித்தனர். அணையில் இருந்து கேரள மந்திரிகள் உபரிநீரை திறந்துவிட்டதை கண்டித்து விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் தமிழக தேசிய விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிராஜ் பேசும்போது, "முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு 2014-ம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் கேரள அரசு தொடர்ந்து பிரச்சினை செய்து வருகிறது. நீர்மட்டத்தை 140 அடிக்கு மேல் உயர்த்தினால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுற்றுலா மற்றும் வணிக கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடும் என்பதால் ஆக்கிரமிப்பாளர்களை பாதுகாப்பதற்காக நீர்மட்டத்தை உயர்த்த விடாமல் கேரளாவில் உள்ள அரசியல் கட்சியினர் பிரச்சினை செய்து வருகின்றனர்" என்றார்.
152 அடியாக...
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி பேசும்போது, "முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்தக்கூடாது என்று கூறும் கேரள அரசு, இடுக்கி அணையின் மதகுகளை அடைத்துவிட்டு முழுமையாக தண்ணீர் தேக்கி வருகிறது. எனவே, பேபி அணையை பலப்படுத்திவிட்டு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். முல்லைப்பெரியாறு அணை குறித்து கேரள நடிகர் பிரித்விராஜ் மற்றும் பலர் அவதூறுகளை பரப்பினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு கலெக்டரிடம் நான் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கேரள அரசை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். இந்த பிரச்சினை மீண்டும் நீடித்தால் கேரளாவுக்கு செல்லும் அனைத்து பாதைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.
கொந்தளிப்பு
முல்லைப்பெரியாறு-வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் பேசும்போது, "நவம்பர் 11-ந்தேதி வரை முல்லைப்பெரியாறு அணையில் 139.50 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக சொல்லி வந்த கேரள மந்திரி ரோஷி அகஸ்டின் தலைமை தாங்கி அணையில் இருந்து உபரிநீரை திறந்து விட்டுள்ளார். தண்ணீரை திறக்க அவருக்கு அதிகாரத்தை யார் கொடுத்தது? தேனி மாவட்ட கலெக்டரை கூட நிகழ்வுக்கு அழைக்கவில்லை. இது மரபு மீறிய செயல். 999 ஆண்டுகால குத்தகை உரிமம் தமிழகத்திடம் இருக்கும் போது கேரள அரசால் எப்படி தண்ணீர் திறக்க முடியும்?. சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தான் தீர்ப்பு அளித்தது. ஆனால், 29-ந்தேதி (நேற்று) தண்ணீர் திறக்கப்போவதாக இடுக்கி மாவட்டத்தில் 3 நாட்களாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேரள அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை நிர்வாகம் துணை போகிறது. தமிழக மாநில உரிமையை பறிக்கும் வகையில் அணையில் தண்ணீர் திறக்கப்பட்ட இந்த நாள், 5 மாவட்ட விவசாயிகளுக்கு கருப்பு நாள். எனவே, தமிழக அரசின் கேரள ஆதரவு போக்கை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்" என்றார்.
ஆர்ப்பாட்டம்
அதைத்தொடர்ந்து விவசாயிகள் பலரும் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், கூட்டரங்கிற்கு வெளியே நின்று கேரளாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்தும், தமிழக, கேரள அரசுகளை கண்டித்தும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்