சென்னையில் 2 கார் திருடர்கள் கைது

விசாரணையில் கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பெங்களூரு போலீசார் கைது செய்து அழைத்து சென்றதை உறுதிப்படுத்தினர்.

Update: 2021-10-29 06:15 GMT
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கார் திருட்டு போன வழக்கில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (வயது 34), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராஜாமணி (45) ஆகியோருக்கு தொடர்பு இருப்பதை பெங்களூரு போலீசார் புலன்விசாரணை மூலம் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 7 பேர் அடங்கிய பெங்களூர் தனிப்படை போலீசார் சென்னை வந்து கோபிநாத்தை கைது செய்தனர். அவர் மூலம் ராஜாமணி திருவல்லிக்கேணி பகுதியில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்ய வந்தனர். ராஜாமணி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நின்று கொண்டிருந்தார்.

இந்தநிலையில் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் வந்திருந்த போலீசார் ராஜாமணியை மிரட்டி காரில் ஏற்றி அழைத்து சென்றனர். இதை பார்த்த சிலர் யாரோ கடத்தி செல்கிறார்கள் என்று நினைத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டனர். உடனே இதுகுறித்து திருவல்லிக்கேணி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து நடத்திய விசாரணையில் கார் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பெங்களூரு போலீசார் கைது செய்து அழைத்து சென்றதை உறுதிப்படுத்தினர். ராஜாமணியின் மனைவி மற்றும் குழந்தைகளை புதுக்கோட்டை மாவட்டத்தில் பெங்களூரு போலீசார் விட்டு சென்றதும் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்