பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களிடம் ரூ.8 லட்சம் அபராதம் வசூல்: மாநகராட்சி கமிஷனர்
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியவர்களிடம் ரூ.8 லட்சம் அபராதம் வசூல் என மாநகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் 12 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், வினியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அக்டோபர் 27-ந்தேதி மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது, 66.80 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.23 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதி முதல் தற்போது வரை 9 ஆயிரத்து 58 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் 3339.91 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.8 லட்சத்து 14 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.