விபத்தில் தொழிலாளி சாவு: ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

சேலத்தில் விபத்தில் தொழிலாளி இறந்த வழக்கில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2021-10-28 22:01 GMT
சேலம்:
சேலத்தில் விபத்தில் தொழிலாளி இறந்த வழக்கில் ரூ.16 லட்சம் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
தறித்தொழிலாளி பலி
சேலம் அல்லிக்குட்டை கங்காபுதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 40). தறித்தொழிலாளி. இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி வீட்டிற்கு பூஜை பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வீராணம் மெயின்ரோட்டில் சென்றார். அப்போது, சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வீராணம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ், கிருஷ்ணமூர்த்தி மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு 6-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி இறப்புக்கு நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் கேட்டு அவரது மனைவி கவிதா, மகள் தர்ஷினி பிரியா மற்றும் தாய் புஷ்பம் ஆகியோர் சேலம் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
நஷ்ட ஈடு வழங்க உத்தரவு
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ந் தேதி விபத்தில் இறந்த கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சத்து 78 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று சேலம் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்திற்கு நீதிபதி ரவீந்திரன் உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் நஷ்டஈடு வழங்காமல் இழுத்தடித்து வந்தனர்.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் அதே கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர் கடந்த மாதம் 17-ந் தேதி வட்டி, அசலுடன் சேர்த்து ரூ.16 லட்சத்து 5 ஆயிரத்து 652 நஷ்டஈடாக வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் உரிய நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.
அரசு பஸ் ஜப்தி
அதன்பேரில், பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கவிதா மற்றும் உறவினர்கள், கோர்ட்டு அமீனா சாமிநாதன் ஆகியோர் நேற்று சேலம் புதிய பஸ்நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். இதையடுத்து அந்த பஸ், சேலம் கோர்ட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. விபத்தில் தறித்தொழிலாளி இறந்த வழக்கில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்