கொளப்பாக்கத்தில் இன்ஸ்பெக்டர் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயம்
கொளப்பாக்கத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 120 பவுன் நகைகள் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி,
சென்னை போரூரை அடுத்த கொளப்பாக்கம், சீனிவாச நகரைச் சேர்ந்தவர் சாம் பென்னட் (வயது 59). இவர், கோடம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (57). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகின்றனர்.
சாம்பென்னட், 2 மாடிகள் கொண்ட வீட்டின் 2-வது மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். முதல் தளத்தில் உள்ள 2 வீடுகளை வாடகைக்கு விட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சாம்பென்னட் தனது வீட்டின் அறையில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 120 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் எங்கு தேடியும் நகைகள் கிடைக்காததால் இதுபற்றி மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தனர். வீட்டின் கதவில் இருந்த பூட்டு, பீரோவின் லாக்கர் உடைக்கப்படாத நிலையில் நகைகள் மாயமாகி இருப்பது தெரிந்தது.
சாம் பென்னட்டின் வீ்ட்டுக்கு மொத்தம் 4 சாவிகள். தாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் தங்களது மகள்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களின் வசதிக்காக முதல் தளத்தில் வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் தங்களது வீட்டு சாவியை கொடுத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு கூடுவாஞ்சேரி செல்லும் போது பீரோவில் இருந்த நகைகளை பிரேமலதா பார்த்ததாகவும், அதன்பிறகு தற்போது பார்க்கும்போது நகைகள் இல்லை என்பதும் தெரியவந்தது.
எனவே அவர்களுக்கு நன்கு அறிமுகமான நபர்கள் யாராவது வீடு புகுந்து பீரோவில் இருந்த நகைகளை திருடினார்களா? அல்லது வீட்டில் உள்ளவர்களே நகைகளை எடுத்து மறைத்து வைத்துவிட்டு திருடு போனதாக நாடகமாடுகிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.