கட்டையால் தாக்கி தொழிலாளி படுகொலை
இரணியல் அருகே கட்டையால் தாக்கி தொழிலாளியை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
திங்கள்சந்தை:
இரணியல் அருகே கட்டையால் தாக்கி தொழிலாளியை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முன்விரோதம்
குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள புளியன்விளை பகுதியை சேர்ந்தவர் நேசமணி (வயது 75), தொழிலாளி. இவருடைய தம்பி அன்பையன் (70). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. அதாவது, அந்த பகுதியில் உள்ள கோவில் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்தநிலையில் நேசமணிக்கு சொந்தமான சில பொருட்களும் காணாமல் போய் உள்ளது. இதற்கு தம்பி அன்பையன் தான் காரணம் என அவர் நினைத்தார். இதுதொடர்பாக நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே நேசமணிக்கும், அன்பையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி அவர்களுக்கிடயே கைகலப்பு உருவானது. இதில் ஆத்திரமடைந்த அன்பையன் கட்டையால் நேசமணியை திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது.
அண்ணன் கொலை
இந்த தாக்குதலில் நிலைகுலைந்த அவர் அதே இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். நேற்று காலையில் நேசமணி இறந்து கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பையனை கைது செய்தனர். அண்ணனை கொன்றதாக தம்பி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலை செய்யப்பட்ட நேசமணிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேசமணியின் மருமகள் தக்கலை ஒன்றிய முன்னாள் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.