ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது; இன்று முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி

தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இன்று(வெள்ளிக்கிழமை) முதல் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

Update: 2021-10-28 20:51 GMT
ஹாசன்:

ஹாசனாம்பா கோவில் நடை திறப்பு

  ஹாசன் (மாவட்டம்) டவுனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் சித்தேஷ்வரர் சாமி கோவிலும் உள்ளது. சித்தேஷ்வரர் கோவிலில் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் ஹாசனாம்பா கோவில் கருவறை தீபாவளியை ஓட்டி ஆண்டுக்கு ஒரு முறை திறந்து 9 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். ஹாசனாம்பா கோவிலில் நடை மூடும்போது ஏற்றி வைக்கப்படும் தீபம், அடுத்தாண்டு திறக்கும் வரை அணையாமல் இருப்பது வழக்கம். இதனை ஹாசனாம்பாவின் சக்தியால் மட்டுமே நிகழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

  கடந்த ஆண்டு(2020) கொரோனா பரவல் காரணமாக ஹாசனாம்மா கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள் மட்டுமே சாமிதரிசனம் செய்தனர்.

  இந்த நிலையில் இந்தாண்டு(2021) தீபாவளியையொட்டி ஹாசனாம்மா கோவில் 28-ந்தேதி(நேற்று) திறக்கபட இருந்தது. அதன்படி நேற்று மதியம் 12.19 மணிக்கு ஹாசனாம்பா கோவில் கருவறை திறக்கப்பட்டது. அப்போது கடந்தாண்டு நடைமூடும் போது ஏற்றப்பட்ட தீபம் அணையாமல் அப்படியே இருந்தது. பின்னர் கோவில் கருவறை சுத்தப்படுத்தப்பட்டு ஹாசனாம்பா தேவிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இன்று முதல் பொதுமக்களுக்கு...

  இதில் மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, சட்டத்துறை மந்திரி மாதுசாமி, இந்து அறநிலையத்துறை மந்திரி சசிகலா ஜோலே மற்றும் பிரீத்தம் ேஜ கவுடா எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் ஆர்.கிரீஷ், போலீஸ் சூப்பிரண்டு ஆர். சீனிவாஸ்கவுடா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டனர். ஹாசனாம்பா கோவிலில் பொதுமக்களுக்கு இன்று(29-ந்தேதி) முதல் சாமிதரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

  கொரோனா காரணமாக கோவிலில் பொதுமக்களுக்கு தடுப்பூசி எடுத்து கொள்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8 நாட்களும் ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படுகிறது.

சக்திக்கு சாட்சி

  இந்த சந்தர்ப்பத்தில் கோவிலுக்கு வெளியே வந்த மந்திரி கோபாலய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

  ஹாசனாம்பா மற்றும் சித்தேஷ்வரர் கோவில்களை புதுப்பிக்க முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். கோவிலின் ஏற்றப்படும் தீபமே அம்மனின் சக்திக்கு சாட்சி. ஹாசனாம்பா தேவியிடம் மக்கள் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்துள்ளேன்.
   இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்