திருச்சி விமான நிலையத்தில் ரூ.76.80 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.76.80 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு
துபாய், சிங்கப்பூர், மலேசியா, மஸ்கட், ஓமன் உள்பட வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல, திருச்சியில் இருந்தும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் சிலர் தங்கம் கடத்தி வருகின்றனர். அவர்களை கண்டறிந்து விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு துபாயில் இருந்து திருச்சிக்கு ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அரியலூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 38) தனது உடலில் மறைத்து கடத்தி வந்த 869 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.42.30 லட்சம் என தெரிய வருகிறது.
2 பேர் கைது
அதே விமானத்தில் வந்த சிவகங்கையை சேர்ந்த மணிகண்டனை(45) சோதனையிட்டபோது அவர் தனது உடலில் டியூப் வடிவில் மறைத்து கடத்தி வந்த 709 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.34.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.