மழைநீரில் நனைந்து அழுகிய பல்லாரிகள்- விவசாயிகள் கவலை

பாவூர்சத்திரம் பகுதியில் மழைநீரில் நனைந்து பல்லாரிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Update: 2021-10-28 20:21 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் பகுதியில் மழைநீரில் நனைந்து பல்லாரிகள் அழுகியதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

பல்லாரி 

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான குறும்பலாபேரி, சாலைப்புதூர், அடைக்கலப்பட்டணம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பல்லாரி பயிரிட்டனர். தற்போது அவற்றை அறுவடை செய்து உள்ளனர். 
ஆனால் போதிய விலை இல்லாததால் விலை ஏறும் என்ற நம்பிக்கையில் அவற்றை வயல்வெளிகளில் சேமித்து வைத்திருந்தனர். 

மழைநீரில் நனைந்தது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக பல்லாரிகள் மழைநீரில் நனைந்து அழுகி உள்ளது. இதனால் பல ஊர்களில் அழுகி சேதம் அடைந்த பல்லாரிகளை அகற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். 
ஏற்கனவே போதிய விலை கிடைக்காமல் பல்லாரிகளை சேமித்து வைத்திருந்த நிலையில் தற்போது அவை மழைநீரில் நனைந்து அழுகி இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற வேதனையை விவசாயிகளுக்கு அளித்து உள்ளது. 

விவசாயிகள் கவலை
 

தற்போது இந்த பல்லாரி மிகவும் குறைந்த விலைக்கே விற்பனை ஆகிறது. இதனால் அதிகளவில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்து உள்ளனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘அதிகளவில் செலவு செய்து பல்லாரியை விளைவித்தோம். ஆனால் உரிய விலை கிடைக்காததால் பல்லாரியை சேமித்து வைத்து விலை அதிகரித்ததும் விற்கலாம் என்று இருந்தோம். ஆனால் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. தற்போது மழையில் நனைந்து பல்லாரிகள் சேதம் அடைந்து விட்டது. இதனால் மிகவும் குறைந்த விலைக்கே அதாவது கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையே விற்பனை ஆகிறது. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. செலவழித்த தொகையை கூட பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம்’ என்று வேதனையுடன் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்