ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம் விலை குறைவால் விவசாயிகள் கவலை

ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மரவள்ளி கிழங்கு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. விலை குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2021-10-28 18:24 GMT
ஆதனக்கோட்டை:
மரவள்ளி கிழங்கு சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான குப்பையன்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான்ஊரணி, சோத்துப்பாளை, சொக்கநாதப்பட்டி, ஆதனக்கோட்டை, கருப்புடையான்பட்டி, பெருங்களூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் தாய்லாந்து, குங்குமரோஸ், முள்வாடி, பர்மா, கிளைமான் உள்ளிட்ட பல்வேறு வகையான மரவள்ளி ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். 
ஏக்கர் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் 12 முதல் 17 டன்களே விளைச்சல் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.பத்து மாத கால பயிராகிய மரவள்ளியை தற்போது பெய்யும் மழையை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விலை வீழ்ச்சி
வியாபாரிகள் மரவள்ளிக்கிழங்கினை விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி லாரிகள் மூலம் நாமக்கல், சேலம் போன்ற பகுதிகளில் இருக்கும் மரவள்ளிக்கிழங்கு அரைக்கும் தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று மரவள்ளிக்கிழங்கினை மாவாக அரைத்து அங்கு சவ்வரிசி உள்ளிட்ட மருந்து பொருட்கள் தயாரிக்கவும் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு மூலப் பொருளாகவும் மரவள்ளி கிழங்குமாவு பயன்படுத்தப்படுகின்றது.
ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.6,500 முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை போன நிலையில், தற்போது தொடர் மழை, பல்வேறு உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மரவள்ளி மாவின் பயன்பாடு குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டன் ஒன்றிற்கு ரூ.5,000 முதல் ரூ.5,500 வரை மட்டுமே விலை போவதாகவும், டன் ஒன்றிற்கு ரூ.1,000-க்கும் மேல் விலை குறைந்துள்ளதால் 10 மாத கால உழைப்பிற்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் கூட செலவு போக கிடைப்பதில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்