பட்டுக்கோட்டையில் ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

பட்டுக்கோட்டையில் ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-10-28 18:09 GMT
பட்டுக்கோட்டை:-

பட்டுக்கோட்டையில் ஆசிரியையிடம் 12 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

பள்ளி ஆசிரியை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிக்காடு பாரதி சாலை பகுதியை சேர்ந்தவர் அய்யாதுரை (வயது62). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி திலகசெல்வி (55). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். 
நேற்று முன்தினம் இரவு 1.45 மணி அளவில் இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர், வீட்டின் பின்புற கிரில் கேட் பூட்டை உடைத்து பின்பக்க மரக்கதவையும் உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். 
பின்னர் 2 பேரும் ஆசிரியை திலகசெல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். திருட்டு போன தங்க சங்கிலியின் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து திலகசெல்வி பட்டுக்கோட்டை நகர போலீசில் புகார் செய்தார். 

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

அதன்பேரில் போலீசார் தஞ்சையில் இருந்து தடயவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 
===

மேலும் செய்திகள்