பா.ஜ.க. மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு
சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியானது தொடா்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மும்முனை சந்திப்பு கள்ளக்குறிச்சி சாலையில் மளிகை மற்றும் பட்டாசு கடை நடத்தி வருபவர் செல்வகணபதி(வயது 49). இவருடைய கடையில் கடந்த 26-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இந்த கோர விபத்தில் 11 வயது சிறுவன் உள்பட 7 பேர் பலியானார்கள். கடை உரிமையாளர் செல்வகணபதி உள்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வழக்குப்பதிவு
இந்த தீவிபத்து சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், மனித உயிர் மற்றும் அருகில் உள்ள கடைகள் சேதமடையும் என தெரிந்தும் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலாக பட்டாசுகளை கடையில் இருப்பு வைத்ததால் தான் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே பட்டாசு கடையின் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
அதன்அடிப்படையில் கடை உரிமையாளர் செல்வகணபதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மளிகை மற்றும் பட்டாசு கடை உரிமையாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ.க. செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.