உறவுகளுடன் 100-வது பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் ராணுவ வீரர்

திண்டுக்கல்லில் முன்னாள் ராணுவீரர் தனது உறவுகளுடன் பிறந்த நாளை கொண்டாடினார்.

Update: 2021-10-28 16:43 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகே உள்ள லட்சுமணம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி கோவிந்தம்மாள் (வயது 87). இவர்கள் தற்போது திண்டுக்கல் பாண்டியன் நகரில் வசிக்கின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள், ஒரு பேரன், 6 பேத்திகள், 4 கொள்ளு பேரன்கள், 3 கொள்ளு பேத்திகள் உள்ளனர். 6 தலைமுறைகளை கண்ட பழனிசாமிக்கு நேற்று 100-வது பிறந்தநாள் ஆகும். இதை சிறப்பாக கொண்டாட குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக தேசியக்கொடி, ராணுவ சீருடை, துப்பாக்கி, தொப்பி, திருக்குறள் புத்தகம் ஆகியவை இடம்பெற்ற கேக் 3 அடி நீளம், 2 அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டது.

 இதையடுத்து மனைவி மற்றும் குடும்பத்தினர் புடைசூழ பழனிசாமி கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து குடும்பத்தினர் அவரிடம் ஆசி பெற்றனர். அனைவருக்கும் திருக்குறள் புத்தகத்தை பழனிசாமி பரிசாக வழங்கினார். இவர் கடந்த 1921-ம் ஆண்டு பிறந்தார். மேலும் 1946-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து 28 ஆண்டுகள் பணியாற்றினார். ராணுவத்தில் பீரங்கி படைப்பிரிவில் கன்மேனாக பணியாற்றிய அவர், ஜம்மு-காஷ்மீர், வாகா எல்லை, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். இந்தியா-சீனா போர், வங்காளதேச பிரிவினை போர் ஆகியவற்றில் பங்கேற்று இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறுகையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன். அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் நாங்கள் பணியாற்றிய இடத்துக்கே வந்து ஊக்கம் அளித்தது மறக்க முடியாதது. ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றாலும் சில கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்தேன். உடலும், மனமும் ஒழுக்கமாக இருந்தால் ஆரோக்கியமாக வாழலாம். இதை எனது குடும்பத்தினர், நண்பர்களுக்கு அறிவுறுத்துகிறேன், என்றார்.

மேலும் செய்திகள்