திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவையை தொடங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை தொடங்க வலியுறுத்தி சர்க்கரை ஆலை அலுவலகம் எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் போராட்டம் நடந்தது.
அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் கோபி, இணை பொறுப்பாளர்கள் யுவராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
அரவை தொடங்கவேண்டும்
அவர்கள் இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தற்காலிக அரவை நிறுத்த உத்தரவை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு 30 டன் கரும்பு இருப்பு வைத்திருக்கும் போது திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 50 டன் கரும்பு இருப்பு உள்ளதால் அரவை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பின்னர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அலுவலரிடம் விரைவில் அரவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினர்.