ஐட்ரோஜென்யா மலர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
கோத்தகிரி பகுதியில் ‘ஐட்ரோஜென்யா’ மலர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு பூ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோத்தகிரி
கோத்தகிரி பகுதியில் ‘ஐட்ரோஜென்யா’ மலர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு பூ ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மாற்று பயிர் சாகுபடி
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு மாற்று பயிராக கொய்மலர் சாகுபடி கொண்டு வரப்பட்டது. குறிப்பாக ஊட்டி, கோத்தகிரியில் அதிகளவில் கொய்மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கார்னீசியன், ஜர்பரா, லில்லியம் போன்ற வகைகள் உள்ளன. இந்த மலர்களின் கொள்முதல் விலையில் அடிக்கடி ஏற்றத்தாழ்வுகள் நிகழ்வதால், விவசாயிகள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் கென்யா, ஆலந்து ஆகிய நாடுகளில் மட்டுமே வளரக்கூடிய ஐட்ரோஜென்யா என்ற வகை மலர்கள், இந்தியாவிலேயே முதன்முறையாக கடந்த ஆண்டு கோத்தகிரியில் சாகுபடி செய்யப்பட்டது. இதற்கு காரணம், மேற்கண்ட நாடுகளில் உள்ள காலநிலை கோத்தகிரியில் நிலவுவதே ஆகும்.
3 நிறங்களில் மலர்கள்
ஒரே செடியில் வெள்ளை, ஊதா, இளஞ்சிவப்பு என 3 நிறங்களில் மலர்கள் கிடைக்கும். இந்த மலர்களுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது.
கொரோனா காலத்தில் சுப நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதால், கோத்தகிரியில் கொய்மலர் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த விவசாயிகளில் சிலர், கொத்து கொத்தாக வளரும் ஐட்ரோஜென்யா வகை கொய்மலர்களை சாகுபடி செய்தனர். இதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி உள்ளனர். கோத்தகிரியில் கடந்த 2 ஆண்டுகளாக ஐட்ரோஜென்யா மலர் செடிகள் பயிரிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கணிசமான லாபம்
இதுகுறித்து கோத்தகிரி பகுதியை சேர்ந்த கொய்மலர் விவசாயி மேகநாதன் கூறியதாவது:-
பிளாஸ்டிக் கூரைகளால் ஆன குடில்களை அமைத்து, மண்ணிற்கு பதிலாக தேங்காய் நார் மற்றும் உரங்கள் அடங்கிய கலவையில் ஐட்ரோஜென்யா மலர் நாற்றுகளை நடவு செய்து, உரிய முறையில் பராமரித்து வந்தால் ஒரு ஆண்டில் பூக்க தொடங்கிவிடும். ஒரு முறை பயிரிட்டால் மாதத்திற்கு ஒருமுறை என 20 ஆண்டுகள் வரை மலர்கள் தொடர்ந்து வளர்ந்து பலன் அளிக்கும். ஒரு மலருக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை கொள்முதல் விலை கிடைத்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ஐட்ரோஜென்யா மலர்களுக்கு விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு சாகுபடி செய்யப்படும் மலர்கள் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் சந்தையில் வரவேற்பு உள்ளது. இதனால் கணிசமான லாபம் கிடைக்கிறது. இதனால் ஐட்ரோஜென்யா மலர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.