சிறையில் உள்ள நண்பனை ஜாமீனில் எடுக்க மூதாட்டியிடம் நகைப்பறித்த சிறுவன் கைது

சிறையில் உள்ள நண்பனை ஜாமீனில் எடுக்க மூதாட்டியிடம் நகைப்பறித்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2021-10-28 06:34 GMT
சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையை சேர்ந்தவர் பார்வதி (வயது 65). இவர், கடந்த 20-ந்தேதி அசோக்நகர் 18-வது அவென்யூ சந்திப்பு பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மூதாட்டியை தாக்கி, அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிக்கினான்.

அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளான். அதன் விவரம் வருமாறு:-

நான் 11-ம் வகுப்பு படித்து வந்தேன். கொரோனாவால் பள்ளி படிப்பை கைவிட்டேன். பின்னர் கஞ்சா போதைக்கு அடிமையானேன். அப்போது கொடுங்கையூரை சேர்ந்த 18 வயதை கடந்தவருடன் நட்பு ஏற்பட்டது. அவர், சங்கிலி பறிப்பு வழக்கில் கொடுங்கையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவரை ஜாமீனில் எடுக்க முடியாமல் அவரது பெற்றோர் சிரமப்பட்டனர். எனவே நான் அவரை ஜாமீனில் எடுப்பதாக சங்கிலி பறிப்பில் ஈடுபட்டேன். போலீசாரிடம் சிக்காமல் சங்கிலி பறிப்பது எப்படி? என்பது குறித்து பெண் கஞ்சா வியாபாரி ஒருவரிடம் பயிற்சி எடுத்தேன். அவர், சிறுவர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டால் சிறையில் அடைக்க மாட்டார்கள். சீர்திருத்த பள்ளியில்தான் அடைப்பார்கள். விரைவில் வெளியே வந்துவிடலாம் என்று கூறினார்.

இவ்வாறு அந்த சிறுவன் கூறியுள்ளான்.

மேலும் செய்திகள்