சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை வருவாய் நிர்வாக ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வருவாய் நிர்வாக ஆணையாளர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேறும் நீர்வழி கால்வாய்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை கூடுதல் தலைமைச் செயலாளரான வருவாய் நிர்வாக ஆணையாளர் கே.பணீந்திர ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேளச்சேரி பிரதான சாலை வீராங்கல் ஓடை வழியாக வெள்ளநீர் வெளியேறும் நீர்வழித்தடங்களில் நவீன எந்திரங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, பள்ளிக்கரணை காற்றாலை ஆராய்ச்சி மையத்தின் தெற்கு பகுதி மற்றும் காமாட்சி மருத்துவமனை சந்திப்பு சதுப்பு நிலப்பகுதியில் பிளாஸ்டிக், குப்பைக்கழிவுகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளையும், நெடுஞ்சாலை குறுக்குப்பாலங்களில் வெள்ள நீர் தடையின்று வெளியேறும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும், துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள நெடுஞ்சாலைகளில் குறுக்குப் பாலங்களில் மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
தூர்வாரும் பணி
சோழிங்கநல்லூர் மண்டலம் ஓ.எம்.ஆர். சாலையில் ஒக்கியம் மேடு பகுதியில் நீர்வரத்து கால்வாய்களில் தூர்வாரும் பணிகளையும், மேடவாக்கம் சோழிங்கநல்லூர் பிரதான சாலையில் உள்ள சாலை குறுக்குப் பாலத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் கன்தீப் சிங் பேடி, தெற்கு வட்டார துணை கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் முரளிதரன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சரவண செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.