ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது பரிசல் இயக்க 2 வது நாளாக தடை

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 2வது நாளாக நீடிக்கிறது.

Update: 2021-10-28 02:27 GMT
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது. 
கனமழை
வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழகத்தில் காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
இதனிடையே நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
2-வது நாளாக தடை
இந்தநிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 5 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 2-வது நாளாக நீடிக்கிறது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 30 ஆயிரத்துக்கு மேல் தண்ணீர் வருவதாலும், பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டதாலும் பரிசல்கள் காவிரி கரையோர பகுதிகளில் கவிழ்த்து போடப்பட்டுள்ளன. 
தீவிர கண்காணிப்பு
மேலும் முதலைப்பண்ணை, மணல்திட்டு, ஆலம்பாடி, நாடார்கொட்டாய், ஊட்டமலை மற்றும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக- கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்