பென்னாகரம் அருகே பயங்கரம் மனைவி கல்லால் தாக்கி கொலை தொழிலாளி கைது
பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் மனைவி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே குடும்ப தகராறில் மனைவி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குடும்ப தகராறு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிழக்கு கள்ளிபுரத்தை சேர்ந்தவர் தீர்த்தன் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரங்கம்மாள் (50). இவர்களுக்கு மாதையன் என்ற மகனும், தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர். மாதையன் மாரண்டஅள்ளியில் தங்கி அந்த பகுதியில் வேலை செய்து வருகிறார். மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்.
இதனால் கணவன்-மனைவி 2 பேரும் கள்ளிபுரத்தில் வசித்து வந்தனர். தீர்த்தனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு தீர்த்தன் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
கல்லால் தாக்கி கொலை
அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு 2 மணி அளவில் மதுபோதையில் இருந்த தீர்த்தன் தனது மனைவி ரங்கம்மாளை கல்லால் தாக்கி உள்ளார். இதில் படுகாயமடைந்த ரங்கம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து தீர்த்தன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை ரங்கம்மாள் வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது ரங்கம்மாள், ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக அவர்கள் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தொழிலாளி கைது
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரங்கம்மாளின் உடலை கைப்பற்றி பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த தொழிலாளி தீர்த்தனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.