சிந்தகி, ஹனகல் இடைத்தேர்தலில் பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது
சிந்தகி, ஹனகல் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பகிரங்க பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. நாளை மறுநாள் 2 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
பெங்களூரு:
2 தொகுதிகளுக்கு தேர்தல்
கர்நாடகத்தில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே 2 தொகுதிகளிலும் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதால், அதற்கு முன்பாக 48 மணிநேரத்திற்குள் பகிரங்க பிரசாரத்தை முடித்து கொள்ள வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக 72 மணி நேரத்திற்கு முன்பாகவே, இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் பகிரங்க பிரசாரத்தை முடிக்க வேண்டும் என்று விஜயாப்புரா மற்றும் ஹாவேரி மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு இருந்தார்கள்.
பகிரங்க பிரசாரம் ஓய்ந்தது
அதாவது இன்று இரவு 7 மணிக்கு தான் பகிரங்க பிரசாரம் நிறைவு பெற வேண்டும். ஆனால் நேற்று இரவு 7 மணியுடன் சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கான பகிரங்க பிரசாரம் நிறைவு பெற்றது. அதே நேரத்தில் இன்று (வியாழக்கிழமை) வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.
இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றதால், 2 தொகுதிகளிலும் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த 3 கட்சிகளின் தலைவர்களும் தொகுதிகளில் இருந்து வெளியேறி உள்ளனர். அதே நேரத்தில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
பசவராஜ் பொம்மை பிரசாரம்
முன்னதாக சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கான பகிரங்க பிரசாரம் நேற்று இரவுடன் நிறைவு பெற்றதால், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட 3 கட்சிகளின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்கள். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது சொந்த மாவட்டமான ஹனகல் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து பல்வேறு கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
ஹனகல் தொகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதற்கு பா.ஜனதாவை வெற்றி பெற செய்யும்படி கூறி அவர் வாக்கு சேகரித்தார். அதே நேரத்தில் பகிரங்க பிரசாரம் நிறைவு பெற்றிருப்பதால் நாளை (அதாவது இன்று) பா.ஜனதா கட்சியினர் ஒவ்வொரு கிராமத்திலும் வீடு, வீடாக சென்று தங்களது வேட்பாளருக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேட்டு கொண்டுள்ளார்.
தேவேகவுடா வாக்கு சேகரிப்பு
இதுபோல், பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்-மந்திரிகளான எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், மந்திரிகள் சிந்தகி மற்றும் ஹனகல் தொகுதியில் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசியதுடன், திறந்த வாகனங்களில் சென்று வீதி, வீதியாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்கள். சிந்தகி தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் திறந்த வாகனத்தில் சென்று பிரசாரம் செய்தார்.
இதுபோல், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் மந்திரிகளும் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்கள். 3 கட்சிகளின் தலைவர்களும், ஒருவருக்கொருவர் பகிரங்க குற்றச்சாட்டு கூறி பிரசாரம் செய்தார்கள். குறிப்பாக 3 கட்சிகளின் தலைவர்களும் சாதி அரசியலை கையில் எடுத்து பிரசாரம் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு
சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே, அடுத்த நடைபெறும் சட்டசபை தேர்தலை தனது தலைமையில் சந்திக்க முடியும் என்பதால், பசவராஜ் பொம்மை தீவிரமாக எடுத்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.
சிந்தகி தொகுதியை தக்க வைத்து கொள்ள தேவேகவுடாவும், குமாரசாமியும் முனைப்பு காட்டி, அங்கேயே முகாமிட்டு இருந்தனர். இந்த இடைத்தேர்தலை தீவிரமாக எடுத்து கொண்டு இருந்த காங்கிரஸ் தலைவர்களும் 2 தொகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. நாளை மறுநாள் 2 தொகுதிகளுக்கும் காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.