காதலிக்க மறுத்த இளம்பெண் கத்தியால் குத்தி படுகொலை; விஷம் குடித்து தமிழக வாலிபர் தற்கொலை

பெங்களூரு அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்த தமிழக வாலிபர் பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-10-27 21:39 GMT
பெங்களூரு:

ஒருதலைக்காதல்

  உத்தர கன்னடா மாவட்டம் அங்கோலாவைச் சேர்ந்தவர் உஷா(வயது 25). இவர் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதற்காக அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணா(30) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒருதலையாக காதலிக்க தொடங்கினார்.

  ஒரு கட்டத்தில் உஷாவிடம், கோபாலகிருஷ்ணா தனது காதலை தெரிவித்தார். அப்போது உஷா கோபாலகிருஷ்ணாவின் காதலை ஏற்க மறுத்தார். மேலும் தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், அதனால் இனிமேல் தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

கத்தியால் குத்தி கொலை

  ஆனால் உஷாவின் மீதான காதலை கைவிட மறுத்த கோபாலகிருஷ்ணா அடிக்கடி அவரை சந்தித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் மல்லசந்திரா கிராமம் அருகே உஷாவை, கோபாலகிருஷ்ணா சந்தித்தார். அப்போது மீண்டும் அவர் தன்னை காதலிக்கும்படி உஷாவை வற்புறுத்தினார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உஷா, கோபாலகிருஷ்ணாவை கடுமையாக எச்சரித்து கண்டித்தார்.

  இதில் கடும் கோபமடைந்த கோபாலகிருஷ்ணா, உஷாவை சரமாரியாக தாக்கினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உஷாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த உஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

தற்கொலை

  இதையடுத்து கோபாலகிருஷ்ணா தனது மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பினார். அவர் கெத்துலாபுரா கிராமத்திற்கு சென்றார். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அப்பகுதி மக்கள் அனுகொண்டனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உஷா மற்றும் கோபாலகிருஷ்ணாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஒருதலைக்காதலால் கோபாலகிருஷ்ணா, உஷாவை படுகொலை செய்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்