தினத்தந்தி புகார் பெட்டி
புகார் பெட்டியில் கொடுக்கப்பட்ட குறைபாடுகள் விவரம் வருமாறு
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
நாகையில் நாகை-காரைக்கால் சாலை போக்குவரத்திற்கு முக்கியத்துவம் பெற்ற சாலையாகும். இந்த சாலையில் மாடுகள்,குதிரைகள் ஆகியவைகள் சுற்றி திரிகின்றன. மேலும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் படுத்து கொள்கின்றன. சாலையின் நடுவே மாடுகள் செல்லும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றத்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
-வாகன ஓட்டிகள், நாகப்பட்டினம்.
பொதுக்கழிவறை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் நகராட்சி 7-வது வார்டில் சாமந்தாம்பாளையம் தெரு உள்ளது. இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக்கழிவறை ஒன்று உள்ளது. தற்போது இந்த கழிவறை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். பொதுகழிவறை சேதமடைந்து காணப்படுவதால் ஒரு சிலர் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்டுபடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுக்கழிவறையை சீரமைக்க வேண்டும்.
-தனசாமி, சாமந்தாம்பாளையம், திருவாரூர்.
வீணாகும் குடிநீர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் ஊராட்சியில் வைகேல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் சாலையோரத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய்யை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைகேல் கிராம மக்கள், குத்தாலம்.
சாலையில் பள்ளம்
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பஸ் நிலையம் பகுதியில் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையின் அருகே உள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்தப் பள்ளம் தற்போது வரை மூடப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளத்தில் மழைநீர் தேங்கிவிடுகின்றன. எனவே, குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேதுராமன், மணல்மேடு.
குண்டும், குழியுமான சாலை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட பெரியசிங்களாந்தி தமிழர் தெருவில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கின்றது. மேலும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தில் உள்ள மின்விளக்கு சரிவர எரிவதில்லை. எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தனபால், திருத்துறைப்பூண்டி.