ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி சாவு

கூத்தாநல்லூரில் ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2021-10-27 19:27 GMT
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூரில் ஆற்றில் மூழ்கி தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.
தச்சு தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடியில் வசித்து வந்தவர் பாபு (வயது 35). தச்சு தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மாலை லெட்சுமாங்குடி வெண்ணாற்றில் குளிப்பதற்காக  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். வெண்ணாற்றின் கரையோரத்தில் உள்ள படித்துறை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஆற்றில் பாபு மூழ்கி மாயமானார்.
அந்த வழியாக சென்றவர்கள் பாபுவின் மோட்டார் சைக்கிள் மற்றும் அவரது உடைகள் படித்துறையில் நீண்ட நேரமாக கிடப்பதை கண்டு  கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து இரவு முழுவதும் வெண்ணாற்றில் பாபுவை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
உடல் மீட்பு
இந்நிலையில் நேற்று காலை லெட்சுமாங்குடி பாலம் அருகே ஆற்றில் பாபுவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் உடலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த பாபுவிற்கு திருமணமாகி  மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்