போலி பீடிகள் விற்ற 2 பேர் கைது
வீரபாண்டி அருகே போலி பீடிகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
உப்புக்கோட்டை:
தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பிரபல நிறுவனங்களின் லேபிள் ஒட்டப்பட்டு போலி பீடிகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. அதன்பேரில் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகள் அற்புதாநந்தா, சந்திரன், சங்கர், தங்கராஜ் ஆகியோர் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் வீரபாண்டி அருகே உள்ள ஜங்கால்பட்டி பகுதியில் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜங்கால்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பவரின் கடையில் போலி பீடிகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த கடையில் இருந்து பிரபல நிறுவனங்களின் பெயரில் லேபிள் ஒட்டப்பட்டிருந்த 90 பண்டல்கள் போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் போலி பீடிகளை விற்பனை செய்து, பணம் வசூலிக்க அங்கு வந்த சீலையம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த அஜய் (19), முருகேசன் ஆகியோரை பிடித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், கைதான 2 பேரும் போலி பீடிகளை தயாரித்து பிரபல நிறுவனங்களின் லேபிளை ஒட்டி விற்பனை செய்தது தெரியவந்தது.
-------