தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-27 16:40 GMT


பழுதான கான்கிரீட் சாலை

கூடலூர் ராக்லாண்ட் தெருவில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை பழுதானதால் பல இடங்களில் உடைந்து பயன்படுத்த முடியாத அளவில் உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  குமார், கூடலூர்.

ஆபத்தான காய்ந்த மரம்

  கூடலூர் குசுமகிரியில் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கு இடையே ஆபத்தான நிலையில் காய்ந்த மரம் ஒன்று நிற்கிறது. இந்த மரம் எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயம் நீடித்து வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.

  கிருஷ்ணன், கூடலூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  பொள்ளாச்சி வெங்கடேசா காலனி பகுதியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை சரிவர அகற்றாமல் தேங்கி கிடக்கிறது. தற் போது அடிக்கடி மழை பெய்து வருவதால் அங்கு குவிந்து கிடக்கும் குப்பைகள் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகள் தேங்குவதை தடுக்க வேண்டும்.

  ரத்தினம், பொள்ளாச்சி.

தினத்தந்தி செய்தி எதிரொலி:

பிச்சைக்காரர்கள் தொல்லைக்கு தீர்வு

  கோவை மாநகர பகுதியில் உள்ள சிக்னல்களில் பிச்சைக்காரர் கள் அதிகளவில் நின்று பிச்சை எடுத்தனர். சிலர் பிச்சை கொடுக்கும்போது அவர்களிடம் இருந்து மணிபர்சை பறித்துக்கொண்டு ஓடும் நிலையும் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக பிச்சைக்காரர்கள் தொல்லை ஒழிந்து உள்ளது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.

  ஆனந்தன், கோவைப்புதூர். 

சாக்கடை கலந்த குடிநீர்

  கோவை சலீவன் வீதி காமாட்சி அம்மன் கோவில் சந்து ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக சாக்கடை கழிவுநீர் கலந்த குடிநீரே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாததால் குடிநீருக்கு இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே நல்ல குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

  சண்முகம், சலீவன் வீதி.

சுகாதார சீர்கேடு

  கோவை 72-வது வார்டு தெலுங்குபாளையம் முத்தையா உடையார் வீதி பெருமாள் கோவில் பின்புறம் குப்பை மேடு உள்ளது. இந்த குப்பைகள் அகற்றப்படாததால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு குப்பைகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

  பார்த்தசாரதி, தெலுங்குபாளையம்.

தரமற்ற தார்சாலை

  கோவை சுக்ரவார்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவோடு இரவாக சாலை போடப்பட்டது. இந்த சாலை தரமற்றதாக இருக்கிறது. இதனால் ஆங்காங்கே சாலை பெயர்ந்து காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தரமான முறையில் தார்சாலை அமைக்க வேண்டும்.

  கணேசன், சுக்ரவார்பேட்டை.

போக்குவரத்து நெரிசல் 

  கோவை 55-வது வார்டு பாரதியார் ரோடு காய்கடை மைதானம் அருகே பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது. இதனால் அதன் மீது இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதற்கு தீர்வு காண வேண்டும்.

  முத்துக்குமார், பாப்பநாயக்கன்பாளையம்.

சேறும் சகதியுமான சாலை 

  கோவை தெலுங்குபாளையம் பிரிவு அருகே உள்ள கலைஞர் நகரில் சாலையின் இருபுறத்திலும் செடிகள் அதிகளவில் உள்ளன. அத்துடன் சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுந்தபடி செல்கிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  விஜயமூர்த்தி, கலைஞர் நகர்.

வீணாகும் குடிநீர்

  கோவையில் உள்ள உப்பிலிபாளையம் சிக்னல் அருகே குடிநீர் குழாய் 15 நாட்களுக்கும் மேல் உடைந்து தண்ணீர் வீணாக சென்று வருகிறது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். குறிப்பாக நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் தண்ணீரை அடித்துவிட்டு செல்வதால் அவதியாக உள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.

  சந்திரன், கோவை.

பழுதான கட்டிடம்

  காடாம்பாடி ஊராட்சி செங்கத்துறையில் தாய்சேய் நல ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கிறது. எனவே எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்பு நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  விக்னேஷ், செங்கத்துறை.

முழுநேர ரேஷன்கடை வேண்டும்

  பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் மோதிராபுரம், காயிதே மில்லத் வீதியில் செயல்பட்டு வரும் பகுதிநேர ரேஷன் கடை களை முழுநேர ரேஷன்கடைகளாக மாற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் அவை இன்னும் முழு நேர கடைகளாக மாறவில்லை. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த 2 பகுதியில் உள்ள கடைகளையும் முழுநேரம் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  நரிமுருகன், சூளேஸ்வரன்பட்டி.

மேலும் செய்திகள்