தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம்
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நூதன போராட்டம்
கோவை
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதற்கு, நூதன முறையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோவை அவினாசி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை ஏந்திக்கொண்டு அதற்கு மலர் தூவி வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசியதாவது:-
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விற்ற போது கூட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.75-க்கு தான் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் கீழ் உள்ளது.
ஆனால் மோடி அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 100 ரூபாயை தாண்டி சென்று விட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விலை உயர்வுக்கு நாங்கள் மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
விலை உயர்வில் தொடர்ந்து சாதனை படைக்கும் பிரதமர் மோடிக்கு உணர்த்தும் வகையில், நாங்கள் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி வாழ்த்து தெரிவிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இதில் நிர்வாகிகள் ராமசாமி, சாஜித், ரஞ்சித், ஜீவானந்தம், பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.