கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் மறியல்
கும்மிடிப்பூண்டி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பஸ் நிறுத்தம் எதிரே தனியாருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தினர் மாவட்ட கலெக்டர், தாசில்தார் உள்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் தொடர்ந்து செல்போன் கோபுரத்துக்கான கட்டுமான பணிகள் நடந்து வருவதை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் தலைமையில் துணைத்தலைவர் ரேவதி விஜயகுமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் கிராம மக்கள் ஆத்துப்பாக்கத்தையொட்டிய ரெட்டம்பேடு சாலையில் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெட்டம்பேடு சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு கிராம மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும் என தாசில்தார் மகேஷ் தெரிவித்தார். இதனையடுத்து தங்களது 1 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.