எல்லையை தாண்டி பழவேற்காட்டில் மீன் பிடிக்கும் நாகை, காரைக்கால் மீனவர்கள் - 60 கிராம மக்கள் எதிர்ப்பு
பொன்னேரி அடுத்த பழவேற்காடு கடலில் எல்லையை தாண்டி அரசால் தடை செய்யப்பட்ட இருமடி சுருக்கு வலையை பயன்படுத்தி நாகை, காரைக்கால் மீனவர்கள் மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்து 60 மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டம் நடத்தினர்.
பொன்னேரி,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள பழவேற்காடு ஏரியை சுற்றி லைட்ஹவுஸ் குப்பம், அரங்கன்குப்பம், எடமணிகுப்பம், கோட்டைக்குப்பம், செம்பாசிபள்ளிகுப்பம் உள்பட 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த பகுதி மீனவர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலை நம்பி மத்திய, மாநில அரசுகளின் விதிகளின்படி பழவேற்காடு அருகே அனுமதிக்கப்பட்ட கடல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லும் அவர்கள் மீன்கள் கிடைக்காமல் பெரும் ஏமாற்றத்துடன் கரை திரும்புவதாக தெரிகிறது. கடலில் மீன்பிடிக்கும் எல்லையை தாண்டி நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பழவேற்காடு அருகே 10 முதல் 20 நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி இழுவலையை பயன்படுத்தி சிறிய மற்றும் பெரிய மீன்களை பிடித்து செல்கின்றனர் என்பது தெரியவத்தது.
இது குறித்து பழவேற்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த மீன்வர்கள் கூறியதாவது:-
எங்கள் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 10 முதல் 30 விசைப்படகுகளில் நாகை, காரைக்கால் மீனவர்கள் வந்து தினந்தோறும் மீன் பிடித்து செல்கின்றனர். எங்கள் பகுதி மீனவர்களின் மீன்பிடி வலைகளை சேதப்படுத்துகின்றனர். இது குறித்து பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் பயன் இல்லை. ஆகவே பழவேற்காடு மற்றும் அதை சுற்றியுள்ள 60 கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாகை, காரைக்கால் மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி இழு வலையை பயன்படுத்தி மீன் பிடித்து கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததும் 10-க்கும் மேற்பட்ட படகுகளில் எங்கள் பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றோம். அப்போது நாகை, காரைக்கால் மீனவர்கள் கடலில் தப்பிச்சென்று விட்டனர். நாகை, காரைக்கால் மீனவர்கள் வந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி இழுவலையில் மீன் பிடிப்பதால் பழவேற்காடு மீனவர்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். இதை தடுக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.