சுகாதார கேடு
ஈரோடு மாநகராட்சி 6-வது வார்டுக்கு உள்பட்ட பி.பி.அக்ரஹாரம் உதுமனசா வீதியில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப் படுகிறார்கள். மேலும், கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. அதனால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை வடிகால் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.ஞானசேகரன், பி.பி.அக்ரஹாரம்.
நுழைவுபாலத்தில் குண்டும்-குழி
ஈரோடு காளைமாட்டு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தின் கீழ் பகுதியில் ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒருசிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே ரெயில்வே நுழைவு பால பகுதியில் குண்டும், குழியுமான ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
ரகுபதி, ஈரோடு.
செடிகள் ஆக்கிரமித்த மின்கம்பம்
ஈரோடு சம்பத் நகரில் இடையன்காட்டு வலசு ரோட்டின் ஓரத்தில் மின் கம்பம் ஒன்று நடப்பட்டு உள்ளது. செடி, கொடிகள் வளர்ந்து இந்த கம்பம் இருப்பதே தெரியவில்லை. இதன் காரணமாக கம்பத்தில் பொருத்தப்பட்டு உள்ள மின்விளக்கு இரவில் ஒளிர்ந்தாலும் வெளிச்சம் இல்லை. எனவே மின் கம்பத்தை சுற்றி உள்ள செடி, கொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலமாணிக்கம், சம்பத்நகர்.
பள்ளியில் தேங்கும் மழைநீர்
கோபி தூக்கநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஊஞ்சப்பாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளியை சுற்றி மழை நீர் தேங்கியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவ-மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கூடம் அருகே வடிகால் வசதி அமைத்து தரவேண்டும்.
வெங்கிடுசாமி, ஊஞ்சப்பாளையம்.
வாகன ஓட்டிகள் அவதி
கோபி-நாகர்பாளையம் ரோடு மிகவும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே கோபி நகராட்சி அதிகாரிகள் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், கோபி.
ஆபத்தான கிணறு
பவானி வைரமங்கலம் அருகே உள்ள குட்டிபாளையம் காலனியில் ஒரு கிணறு உள்ளது. அதிக ஆழமுள்ள இந்த கிணற்றுக்கு தடுப்பு சுவரோ, மூடியோ இல்லை அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் விளையாட்டாக கிணற்றை எட்டிப்பார்க்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஆபத்தான அந்த கிணற்றை சுற்றிலும் தடுப்பு சுவர் கட்டவோ? அல்லது மூடி போடவோ? நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குட்டிபாளையம் காலனி.
குவிந்து கிடக்கும் குப்பை
அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஏரியின் உபரி நீர் வெளியேற கூடிய பகுதியில் மலைபோல் குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. உபரி நீர் வெளியேறும் போது குப்பைகள் அனைத்தும் வாய்க்கால் மூலம் அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே உபரிநீர் வெளியேற்றப்படுவதற்குள் குப்பைகளை அள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பொதுமக்கள், கெட்டி சமுத்திரம்.
தேங்கிய மழைநீர்
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் புதுப்பாளையம் என்ற இடத்தில் சாக்கடை கழிவு நீர் மற்றும் மழைநீர் ரோட்டின் ஓரத்தில் குளம் போல் தேங்கி நிற்கிறது. பல நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. எனவே தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரையும், மழைநீரையும் அப்புறப்படுத்த அதிகாரிகள் ஆவன செய்யவேண்டும்.
ெஜயா, அந்தியூர்.
--------------------