என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - கல்வி முறையை மாற்றக்கோரி வீடியோ பதிவு
ஹாசனில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் கல்வி முறையை மாற்றக்கோரி உருக்கமான வீடியோ பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
ஹாசன்:
என்ஜினீயரிங் மாணவர்
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா இரியாலா கிராமத்தை சேர்ந்தவர் தோபேகவுடா. இவர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் ஆவார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதியின் மகன் ஹேமந்த்கவுடா(வயது 20). இவர், ஹாசன் டவுன் புறநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படித்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுதியில் ஹேமந்த்கவுடா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் ஹாசன் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து
வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஹேமந்த்கவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஹேமந்த் கவுடா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையே தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேமந்த்கவுடா தான் பேசிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்.
கல்வி முறையை...
அந்த வீடியோவில், கல்வி முறையை மாற்றாத வரை மாணவர்களால் எதையும் சாதிக்க முடியாது. எனது மரணத்திற்கு பிறகு உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய வேண்டும். அதேபோல் இறுதிச் சடங்கில் மாநில முதல்-மந்திரி, மற்றும் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும். எனது உயிர் தியாகம் நாட்டில் உள்ள பல மாணவர்களுக்கு பயனளிக்கும் என நம்புகிறேன் என்று பேசியிருந்தார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஹேமந்த்குமார் உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹாசன் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.