எரிபொருள், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

எரிபொருள், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.

Update: 2021-10-26 19:20 GMT
ராஜபாளையம், 
எரிபொருள், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார்.
செயற்குழு கூட்டம் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில், முன்னாள் மாநில செயலாளர் மாணிக்கம் நூற்றாண்டு விழாவும், மாவட்ட செயற்குழு கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர செயலாளர் ரவி தலைமை தாங்கினார்.  நகர துணைச்செயலாளர் விஜயன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமசாமி, மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம், மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
சைக்கிள் பேரணி 
அப்போது மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- 
விமானத்திற்கு பயன்படுத்தும் உயர்ரக பெட்ரோல் ரூ.70- க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சாமானிய மக்கள் பயன்படுத்தும் எரிபொருளான பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. டீசலும் ரூ.100-க்கு மேல் உயர்ந்து விட்டது. சமையல் எரிவாயு விலை ஆயிரத்தை எட்டிவிட்டது.
பெட்ரோலுக்கு விதித்துள்ள வரியை குறைக்க மத்திய அரசு தயாராக இல்லை. இதனை கண்டித்து வருகிற 30-தேதி மாநிலம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வு 
 100 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு துரிதப்படுத்த வேண்டும். பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. 
இதனால் மக்கள் பாதிக்கப்படுவதால் விலை உயர்வை கட்டுப்படுத்தி அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய சூழலில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு லாபத்தின் அடிப்படையில் உரிய போனஸ் வழங்க வேண்டும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக தொழிலாளர்கள் பணியாற்றும் விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் நூல் விலை ஏற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பட்டினி 
கொரோனா தொற்று காரணமாக குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 
ஊரடங்கு காலத்தில் அ.தி.மு.க. மற்றும் மத்திய அரசு போதுமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.  குறிப்பாக காசநோய் பட்டினியால் அதிகரித்துள்ளது. நாட்டில் 21 கோடி மக்கள் இரவில் பட்டினியாக தூங்குவதாக அதிகாரப்பூர்வமான அறிக்கை உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு மக்களே வாக்களிக்கும் முறையை பயன்படுத்த வேண்டுமென முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்