மாணவியை கடத்தி திருமணம் செய்தவர் கைது

மாணவியை கடத்தி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-10-26 19:17 GMT
ஆவூர்
விராலிமலை பகுதியை சேர்ந்த ஒருவரது சகோதரி திருச்சி மாவட்டம் வீரப்பூர் பகுதியில் உள்ளார். இவரது 16 வயது மகள், தாய்மாமன் வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18-ந் தேதி காலை பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்ற மாணவி அன்று இரவு வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
 புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து மகன் அஜித் (வயது 25), பள்ளி மாணவியை கடத்திச் சென்று விராலிமலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கும்பகோணத்தில் உள்ள நண்பர் வீட்டில் தங்கியிருந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து திருச்சி வழியாக கோவைக்கு செல்லும் தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவந்தி ஆகியோர் அவர்களை திருச்சி பஸ் நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர். 
கைது
அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக அஜித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி அவரது பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.


மேலும் செய்திகள்