பழுதான பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
உடுமலை அருகே பழுதான பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமங்கலம்
உடுமலை அருகே பழுதான பாலத்தில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலம்
உடுமலையில் இருந்து குடிமங்கலம் செல்லும் சாலையில் இருந்து குறிஞ்சேரி, புக்குளம் வழியாக பெதப்பம்பட்டி செல்லும் கிராம இணைப்பு சாலை உள்ளது. கிராம இணைப்புசாலை வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயிகள் தங்களது விளை பொருட்களை சாலை வழியாக கொண்டு செல்கின்றனர்.
சாலையின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் உள்ளது. பாலத்தின் அடியில் தண்ணீர் செல்லும் வகையில் குழாய்அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தை ஒட்டிய பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் செல்லும் பாதையை அடைத்து உள்ளது. பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பாலம் பலமிழந்து பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
தடுப்புச்சுவர்
பாலத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தைக் கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே பழுதான பாலத்தை சீரமைத்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.