பலத்த மழையால் 3 ஆயிரம் வாழைகள் சேதம்

அவினாசி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 3 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.

Update: 2021-10-26 19:12 GMT
அவினாசி
அவினாசி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால்  3 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.
பலத்த மழை
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அமராவதி, திருமூர்த்தி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக ஆங்காங்கே உள்ள குளங்களுக்கும் தண்ணீர் வந்துகொண்டுள்ளது. இதனால் குளம் மற்றும் குட்டைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அது மட்டுமல்ல விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் சாகுபடி செய்யய்பட்டுள்ள பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. 
 அவினாசி பகுதியிலும்  தென்னை, வாழை மஞ்சள், நெல் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அவினாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் இரவு நேரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. எனவே கரையப்பாளையம், நடுவச்சேரி, சின்னேரிபாளையம், கானூர், உள்ளிட்ட பல பகுதிகளில் குட்டைகள் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
வாழைகள் முறிந்தன
அதேசமயம் சின்னேரிபாளையம், வளையபாளையம், கானூர், கருவலூர், உப்பிலிபாளையம் போன்ற பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டத்தில் வாழை பயிரிட்டிருந்தனர். தற்போது அடித்த சூறாவளிக்காற்றால் உப்பிலிபாளையம், கருவலூர் சின்னேரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த 3000 வாழைமரங்கள்   முறிந்து நாசமானது. 
இதுபற்றி விவசாயி சண்முகம் கூறுகையில் “எனது தோட்டத்தில் 1000 வாழை மரங்கள் நட்டு இரவுபகல் பாராது தண்ணீர் இறைத்து, தேவையான உரம் வைத்து வளர்த்து வந்தேன். சூறாவளி காற்றால் குலை தள்ளிய ஏராளமான வாழைமரங்கள் முறிந்து நாசமானது. இதற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்