அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கொரோனாவுக்கு பலி

திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கொரோனாவுக்கு பலியானார்.

Update: 2021-10-26 19:07 GMT
திருப்பூர்
திருப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கொரோனாவுக்கு பலியானார்.
டாக்டருக்கு கொரோனா 
தமிழகத்தில் கொரோனா வைரசை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் தினமும் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கேரள மாநிலம் குமுளியை சேர்ந்த அருள் ராஜா (வயது 56) என்பவர் திருப்பூர் 2-வது ரெயில்வே கேட் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த மாதம் 27-ந்தேதி சளி மற்றும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 
பலி
இதனால் மதுரைக்கு சென்ற அவர் ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பலியானார். திருப்பூரில் அவர் பணியாற்றி வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. 
இதில் டாக்டர்கள், செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி டாக்டர் அருள்ராஜாவுக்கு இரங்கல் தெரிவித்தனர். 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு அரசு டாக்டர் பலியானது இதுவே முதல் முறையாகும். 

மேலும் செய்திகள்