குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்குவதால் பொதுமக்கள் மறியல
குடியாத்தம் அருகே சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் தேங்கும் கழிவுநீர்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், சீவூர் ஊராட்சி கள்ளூர் அடுத்த குறிஞ்சி நகர் பகுதியில் 500-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழை நீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும், அதிகாரிகளுக்கு தொடர்ந்து மனு அளித்தும் வருகின்றனர்.
கடந்த ஜூன் மாதம் மோர்தானா அணையை திறக்க வந்த அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆகியோரிடம் கழிவுநீர் கால்வாய் குறித்து இப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கால்வாய் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் சாலைமறியல்
தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் கழிவுநீர் மற்றும் மழை நீர் வெளியேறாமல் குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலை உள்ளதாகவும் கூறி நேற்று குடியாத்தம்- பலமநேர் சாலையில் கள்ளூர் கிராமம் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே.எஸ் யுவராஜ், எஸ்.சாந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி, துணைத் தலைவர் அஜீஸ், வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் உஷா உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், கால்வாய் கட்டும் பணியை தொடங்கி விரைவில் முடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் குடியாத்தம்-பலமநேர் சாலை வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு நின்றிருந்தன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நேற்று சாலை மறியல் நடைபெற்றபோது மதிய வேளை என்பதால் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு சாலைமறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சாலையில் அமர்ந்து இருந்த பொதுமக்கள் மதிய உணவு சாப்பிட்டனர்.