குடியாத்தம் அருகே ஒரே வாரத்தில் 2 வது முறையாக நில அதிர்வு
குடியாத்தம் அருகே கிராமங்களில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டது. பாத்திரங்கள் உருண்டதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடினர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே கிராமங்களில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டது. பாத்திரங்கள் உருண்டதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே ஓடினர்.
நில அதிர்வு
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த 21-ந் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 25-ந் தேதி இரவு சுமார் 10.30 மணி அளவில் மீண்டும் தட்டப்பாறையை அடுத்த மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி, மீனூர் கொல்லைமேடு உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஓட்டம்
சில வினாடிகளே நீடித்த இந்த நில அதிர்வின்போது வீட்டில் பரண் மீது இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. பீரோக்கள், கட்டில்கள் சில அங்குலம் நகர்ந்துள்ளது. கால்நடைகள் தொடர்ந்து கத்தியது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் வீட்டை விட்டு வவீதிக்கு ஓடி வந்தனர்.
ஒரே வாரத்தில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். கிராம மக்கள் கூறுகையில் இது குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் வருங்காலங்களில் மிகப்பெரிய அளவில் இப்பகுதியில் நில அதிர்வு ஏற்படும் அபாயம் உள்ளதா என ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அச்சத்தை போக்க வேண்டும்.
ஒரே வாரத்தில் இரண்டு முறை நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் இரவு நேரம் என்றாலே பயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் வருவாய்த்துறையினர் நில அதிர்வு குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.