ஜோலார்பேட்டை அருகே பெண்ணின் பிணத்தை தோண்டி கழுத்தை அறுத்த மர்ம நபர்கள்
ஜோலார்பேட்டை அருகே பெண்ணின் பிணத்தை தோண்டி கழுத்தை மர்ம நபர்கள் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே பெண்ணின் பிணத்தை தோண்டி கழுத்தை மர்ம நபர்கள் அறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உடல் நலமின்றி பெண் சாவு
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவர் ரெயில்களில் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி மாதம்மாள் (45). உடல்நிலை சரியில்லாமல் கடந்த 23-ந்தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24-ந் தேதி இறந்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து அவரது உடலை நேற்று முன்தினம் பாரதிதாசன் நகரில் உள்ள சுடுகாட்டில் உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாதம்மாள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகில் மர்ம நபர்கள் மது அருந்தி உள்ளனர்.
கழுத்து அறுப்பு
அப்போது புதைக்கப்பட்ட இடத்தில் மாதம்மாளின் உடலை தோண்டி தலையை வெட்டி எடுத்து சென்றுவிட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் யாரோ மது அருந்திவிட்டு மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி கழுத்தை அறுத்து விட்டு சென்றிருப்பது தெரியவந்தது.
மது அருந்தியவர்கள் யார்?, எதற்காக கழுத்தை அறுத்தார்கள் என்பது தெரியவில்லை. இது சம்பந்தமாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
புதைக்கப்பட்ட பெண்ணின் உடலை தோண்டி கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.